என்ன தான் பாசம், நேசம் என ஒருபுறம் இருந்தாலும், அவையெல்லாவற்றையும் விட பணம் தான் வாழ்க்கை என்பதை நம் சமுதாயமும், பெற்றவர்களும் நாம் பிறந்தது முதலே நம் மனதில் வலுக்கட்டாயமாக எழுதி வைத்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்..
நம் சிறுவயதில் அவர்கள் நமக்கு வாங்கித்தரும் பொம்மையிலிருந்து, சட்டை, ட்ரவுசர், ஷூ வரை இந்த பட்டியல் நீள்கிறது.. அதில் நிறைந்த பாசத்தை விட, 'அது விலை அதிகம்.. பத்திரமா வச்சுக்க.. உடைச்சுடாத.. கிழிச்சுடாத'.. என சொல்லப்பட்டு தான் வளர்க்கப்படுகிறோம்..
பள்ளிப்பருவத்தில் நாம் பணத்தின் அருமையை உணர வேண்டும் என அவர்கள் செய்யும் அதீத கட்டுப்பாடினால், தடம் தவறி சொந்த வீட்டிலேயே கயவர்களாக மாறிய சிறுவர்களின் கதை பல உண்டு.. தாராள போக்கும், அதீத கட்டுப்பாடும் எத்தகைய மனிதனையும் தவறு செய்ய நிச்சயம் தூண்டும்.. நம் வாழ்க்கையை முன்னரே தீர்மானிக்கும் பொறுப்பு நம் பெற்றோர்களின் கைகளின் வந்துவிடுகிறது... இதை உணர்ந்து நம்மை சரியான வழியில் நெறிப்படுத்திட எத்தனை பெற்றோர்கள் பக்குவப்பட்டிருக்கிறார்கள் என தெரியவில்லை..
அடுத்து, நாம் சற்று பெரியவனானதும்.. நீ டாக்டர் ஆகணும் இல்லனா எஞ்சினியர் ஆகணும் என நம் விருப்பங்களில் வியாபாரப்பாங்கை திணிக்கிறார்கள்.. அவர்களை பொறுத்தவரை இவ்விரண்டு தொழில்கள் தான் வருமானத்தை வாரி இறைக்கும்,, இதைத்தவிர வேறு ஏதாவது துறையில் நாம் செல்ல விரும்பினால், அதற்கு சமுதாயத்திற்கு முன்பாகவே நம் பெற்றோர்கள் தான் முதல் எதிரியாக வந்து நிற்கிறார்கள்.. வேறு வழியின்றி, எதிர்த்து சாதிக்க திராணியில்லாமல் எத்தனை எத்தனையோ ஆண்களும் பெண்களும் இங்கு, சமூகத்தால் திணிக்கப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள்..
பணத்தை தாண்டியும் ஒரு வாழ்க்கை உள்ளதென்பதை கற்றுக்கொடுக்க மறந்துவிடத் தான் செய்கிறார்கள்.. இந்த நிலையை களைய கல்வியறிவு மட்டும் போதுமானதாக இருப்பதில்லை.. கூடவே பட்டறிவும், பகுத்தறிவும் அவசியமாகிறது....